கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த பாகலூர், எலுவப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர், முனிராஜ் (40). பால் வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரவு 10 மணியளவில், பாகலுருக்குச் சென்றுவிட்டு, தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், அவரை வழிமறித்த மர்ம நபர்கள், சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர். இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து, அவ்வழியாகச் சென்றவர்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த முனிராஜ் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், பால் வியாபாரியை கொலை செய்த மர்ம நபர்கள் பாகலூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்ற தனிப்படை போலீசார், அங்கிருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த விசாரணையில், பால் வியாபாரியை கொலை செய்தவர்கள் எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மது (32) மற்றும் மதுவின் சித்தி மகன் விஜயகுமார் (27) என தெரிய வந்துள்ளது.