கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பானுரெட்டியைச் சந்தித்து ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த விதைகள் திருநங்கைக்குழுவினர் மனு அளித்தனர்.
இது குறித்து அக்குழுவின் தலைவி சாமுண்டீஸ்வரி தெரிவிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் தலைமையிடமாகக் கொண்டு நாங்கள் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்டம் முழுவதும் வாழ்ந்துவருகிறோம்.
நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் கடந்த 10 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் தங்கிவருகிறோம். கரோனா ஊரடங்கு காலம் என்பதால் எங்களால் வாடகை கொடுக்கக்கூட முடியவில்லை.
அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் தவித்துவருகிறோம். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த பத்து வருடங்களாக மனு அளித்துவருகிறோம்.
ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். தற்போது புதியதாக வந்திருக்கிற மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளையும் எங்களது கஷ்டங்களையும் எடுத்துக்கூறி மனு அளித்தோம்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவித்து இன்னும் பதினைந்து தினங்களில் எங்களுக்கு பட்டா வழங்கப்படும் என உறுதிமொழி அளித்துள்ளார்.
மேலும் ஓசூர் வட்டாட்சியர் செந்திலை நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார். எனவே எங்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.