தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களை தேடி மருத்துவம் - ஒரு கோடி இலக்கு: ஸ்டாலின் உறுதி - ஸ்டாலின் பேச்சு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம்

By

Published : Aug 5, 2021, 11:02 PM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் தொடக்கவிழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணொலி காட்சி வாயிலாக சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று இயன்முறை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "முன்னோடி திட்டமாக விளங்கக்கூடிய வகையில மக்களை தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தோற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் மிகுந்த அர்ப்பணிப்போடு இருந்தது.

முன்கள பணியார்களுக்கு நன்றி

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற பணி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் மருத்துவமனையை தேடி வரக்கூடிய சூழ்நிலையை மாற்றக்கூடிய வகையில் மக்களை தேடி மருந்துவம் செல்லும் என்ற காலத்தை உருவாக்கியிருக்கிறோம்.

மக்களை தேடி மருத்துவம்

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவ சேவைகளை இதன் மூலமாக வழங்கப்படும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலாமல் உள்ள நபர்களைக் கண்டறிந்து உடல் நல பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், சிறுநீரக பிரச்சினை, இதய நோய்கள், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் ஆகியன கண்டறியப்பட்டு சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருக்கும். இத்திட்டத்தில் பொது சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கெடுத்து சேவையாற்ற இருக்கிறார்கள்.

ஒரு கோடி இலக்கு

முதற்கட்டமாக 1264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், ஐம்பது பிசியோதெரபி மருத்துவர்களும், 50 செவிலியர்களும் இல்லம் தேடி மருந்து திட்ட சேவையில் ஈடுபடவுள்ளனர். இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 30 லட்சம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள்" என்று தெரிவித்தார்.

ஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகளில் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது முக்கிய உறுதி மொழியாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details