கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அஞ்செட்டியில் 3050 என்ற எண் கொண்ட அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மேற்பார்வையாளராக தருமபுரி மாவட்டம், பொங்கவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 24ஆம் தேதி இவர் வழக்கம் போல, அரசு மதுபானக் கடையைத் திறக்க சென்றபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, மதுப்பாட்டில்கள் திருடு போய் இருந்தன.
இதுகுறித்து அஞ்செட்டி காவல் துறையினருக்கு தகவலளித்த அவர் காவல் துறையினரின் உதவியுடன் மதுப்பாட்டில்களை எண்ணி பார்த்துள்ளார். அப்போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள 16 பெட்டி, மதுப்பாட்டில்கள் திருடு போனது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அரசு மதுபானக் கடையில் திருடிய 16 பெட்டி, மதுப்பாட்டில்களில் 3 பெட்டி மதுப்பாட்டில்களை வயிறு நிரம்ப குடித்த அடையாளம் தெரியாத நபர்கள், மீதமிருந்த 13 பெட்டி மதுப்பாட்டில்களையும் ஜூலை 8ஆம் தேதியன்று காலை அரசு மதுபானக் கடை வாசல் அருகே வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.