கிருஷ்ணகிரி: மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமானது "எருது விடும் விழா". இந்த விழாவில் வேகமாக ஓடக்கூடிய காளைகள் மட்டுமே பங்கேற்கும். மாடுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டப்பட்டு, இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்படும்.
இருபுறங்களில் மரங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தோரணம் கட்டும் பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தான் இளைஞர்கள், மாட்டினை அடக்க வேண்டும். சீறிபாயும் காளைகளை ஒருவரோ அல்லது கூட்டாகவோ பிடிக்கலாம். அப்படி பிடிப்போருக்கு மாட்டு கொம்பில் இருக்கும் தடுக்கை மட்டுமே பரிசாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற பரிசுகள் காளை உரிமையாளர், மாடு பிடி வீரர்களுக்கோ வழங்கப்படாது.
மாட்டுக்கொம்பில் கட்டப்படும் தடுக்கைகளின் மதிப்பு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாட்டினை பிடிப்போருக்கு ரொக்கப்பணத்தைப் பரிசாக அறிவிப்பதும் உண்டு. ஒரு மாட்டினை பலமுறையும் அவிழ்த்துவிடலாம். நூற்றாண்டுகளுக்கும் மேலாக எருதுவிடும் விழாக்கள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.