கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த ராமச்சந்திரன் கிராமத்தைச் சேர்ந்தவர், அப்பையப்பா(55). இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவ்வப்போது இவரது விளைநிலத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருடுபோனதால், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முன்விரோதம் இருந்தது.
இதனால் அப்பையப்பா, சரியான தருணம் கிடைக்கும்போது கிருஷ்ணப்பாவை பழி தீர்க்க காத்திருந்தார். இந்நிலையில் நேற்று இராமச்சந்திரன் கிராமத்தில் தெருக்கூத்து நடந்துள்ளது. தெருக்கூத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு 3.30 மணியளவில் கிருஷ்ணப்பா திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணப்பாவை உன்னிடம் தனியாக பேச வேண்டுமென அப்பையப்பா விளைநிலத்திற்கு தனியாக அழைத்துச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, வயிறு பகுதிகளில் குத்தியதுடன் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.