தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருவதைக் காரணம்காட்டி தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பயணிகள் வாகனங்களை கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்க பல கெடுபிடிகளை கர்நாடக காவல் துறையினர் காட்டுகின்றனர்.
இதனால், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் கர்நாடக காவல் துறையினர் தமிழ்நாடு வாகனங்களைப் பல மணி நேரங்களாக நிறுத்திவைக்கின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "கர்நாடகாவிற்குள் செல்ல இ-பாஸ் வைத்திருந்தும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளைக் கரோனா பரிசோதனைசெய்து அத்திப்பள்ளியில் உள்ள கல்லூரியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்ற உறுதியான பின்பு கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் வரை இ-பாஸ் மூலம் அனுமதித்திருந்த நிலையில், இன்று திடீரென்று கர்நாடகாவிற்குள் பயணிகளை அனுமதிப்பதில்லை எனக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். தொடர்ந்து அத்தியாவசிய பொருள்கள் மட்டும் பல்வேறு கெடுபிடிகளுக்கிடையே அனுமதிக்கப்பட்டுவருகிறது.
மேலும் பணிக்குச் செல்பவர்கள் நிறுவனங்கள் சார்ந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் பல கடுமையான கெடுபிடிகளுக்குப் பின்பு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மாநில எல்லையில் திரும்பிச் செல்கின்றன. சில வாகனங்கள் பத்து மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து செல்கின்றன" எனத் தெரிவித்தனர்.
கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு மேலும் தமிழ்நாட்டிலிருந்து சொந்த கார் வைத்துள்ளவர்கள் மது வாங்குவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக நுழைய முற்படுகின்றனர். அதனால்தான் இவ்வாறு கட்டுப்பாடு விதிப்பதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:கர்நாடகா டூ தமிழ்நாடு: பைக்கில் மதுரை வந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!