’குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு’ என்பார்கள். இங்கு முதலில் உள்ள குமரி பெண்ணைக் குறிப்பது ஆகும். இரண்டாவது குமரி ’கற்றாழை’. ஆனால் பெண்களுக்கு மட்டுமின்றி உடல் வெப்பத்தைத் தணிக்க, இன்று உலகின் அனைத்து பாலினத்தவருக்கும் கற்றாழை என்னும் வரப்பிரசாதம் தேவைப்படுகிறது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு ’கற்றாழை ஜூஸ்’ தொழில் செய்து வெற்றி பெறத் துடிக்கும் கல்லூரி மாணவர் அருணாஷ் குறித்த செய்தித் தொகுப்புதான் இது.
கற்றாழை பெரும்பாலும் மலைப் பகுதிகளில்தான் விளைகிறது. கற்றாழை அறுவடை அவ்வளவு எளிதல்ல. கத்தியைக் கொண்டு கணுவின் தொடக்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது கற்றாழை. அதன் பின்னர், பக்கவாட்டிலும், நுனியிலும், அடிப் பாகத்திலும் வெட்டப்பட்டு ஒரு சாக்கில் சேமித்து கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதன் கசப்பு நீங்க, பலமுறை தண்ணீரைக் கொண்டு கழுவப்படுகிறது. அதன்பின்பு, முன்பக்கத் தோல் பிரித்தெடுக்கப்படுகிறது. தொடர்ந்து, பின்பக்கத் தோலின் மேலே உள்ள ஜெல்லி போன்ற பகுதி, பலமுறை கழுவப்பட்டு தனிப் பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இரவு ஊறவைக்கப்பட்ட தயிரானது காலையில் தாளிப்பு போட்டு கடையப்பட்டு மோராக மாற்றப்படுகிறது. பின்பு கற்றாழை ஜெல்லி சேர்த்து அரைக்கப்பட்டு மோரும், காற்றாழை ஜூசும் தனித்தனி பாத்திரங்களில் சேமிக்கப்படுகின்றன.
இதன்பிறகு, மூன்று பங்கு கற்றாழை ஜூஸுடன் ஒரு பங்கு மோர் ஊற்றப்பட்டு, சிறிது உப்பு, மிளகுப் பொடி சேர்த்து, காலை நேர நடையால் சோர்ந்து களைப்புடன் வரும் நுகர்வோருக்கு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களில் ஒரு சில மாணவர்கள்தான் சுயசார்பு பொருளாதாரத்துடன் வாழ ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் படிக்கும்போதே சுய தொழிலில் ஈடுபட்டு பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார் மாணவர் அருணாஷ்.
இவர் தற்போது இளங்கலை தாவரவியல் படித்துக் கொண்டிருக்கிறார். தாவரவியல் படித்ததாலோ என்னவோ மூலிகைகளின் மகத்துவம் அறிந்து வைத்துள்ளார் அருணாஷ். அந்த வகையில் கற்றாழை ஜூஸ் தயாரித்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அருணாஷுக்கு இந்தத் தொழிலில் உதவியாக, அவரது 45 வயது தாயாரும் மகனுடன் களத்தில் நிற்கின்றனர்.