கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் சாந்தி, ஜெயராமன் தம்பதியினருக்கு பாலாஜி என்ற மகனும், ரேணுகா தேவி (28) என்ற மகளும் உள்ளனர். கால்களை தரையில் இழுத்துக்கொண்டு நகரும் ரேணுகாவிற்கு, தனித்து செயல்படுவது கடினம். இவர் அமர்ந்த இடத்திலேயே செய்யும் வேலைகளை செய்தபடி தன் நாள்களைக் கடத்தி வருகிறார். பிறவியிலேயே இந்த குறைபாடு இருந்தாலும் பரவாயில்லை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் ரேணுகாவின் வாழ்க்கை போராட்டக் களமாக மாறியுள்ளது.
இவர் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தார் உதவியுடன் தனது இருத்தலுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பிறரை சார்ந்து வாழ விரும்பாத ரேணுகாவின் கடந்த காலம் குறித்து கேட்டோம். அவர் கூறுகையில், “கடந்த 2012ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராசு என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. மின்வாரியத் துறையில் பணிபுரிவதாகக் கூறி அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவருடைய குடும்பத்தினரும் என்னை மிகவும் துன்புறுத்தினர். பின்னர், எனக்கிருந்த வயிற்று வலியை காரணம் காட்டி எனது பெற்றோரிடமே என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இப்போது எனது பெற்றோர் என்னை பராமரித்து வருகின்றனர்.
எனது தந்தை தனியார் மருத்துவமனையில் காவலராக பணியாற்றிவருகிறார். சொற்ப வருமானத்தில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது பாரமாயிருக்கிறது. தம்பியின் வருமானம்தான் குடும்பத்தைத் தாங்குகிறது. எனது கணவரிடம் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் வழக்கில் பெரிதும் முன்னேற்றமில்லை” என்றார்.
கசந்து போன திருமண வாழ்க்கையுடன் தவிக்கும் ரேணுகாவைக் குறித்து அவரது தாயார் கூறுகையில், “ திடீரென ஒரு நாள் ரேணுகாவின் கை, கால்களில் இயக்கம் இல்லாமல் போனது, எதனால் என்றே எங்களுக்கு புரியவில்லை. உடலில் நரம்பு சார்ந்த பிரச்னை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறிவிட்டனர். தனியாரிடம் சென்று சிகிச்சை பெற எங்களிடம் போதிய பண வசதியில்லை. அரசுதான் உதவ வேண்டும்” என்றார்.
மழைக்கு ஒழுகும் ஒரு சிறிய ஓட்டு வீடு மட்டும்தான் தங்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கும் ரேணுகா, கணவனைப் பிரிந்து வந்த பிறகு புளியம்பழத்தை மாசை நீக்கி தரும் பணியை செய்து வந்தார். கணவரை பிரிந்து வந்த ஏழு மாதங்களுக்கு பிறகு எப்போதும் போல விடியற்காலையில் ரேணுகா விழித்துள்ளார். வழக்கம்போல எழுந்திருக்க முயன்ற அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை.