கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டிலேயே இராணுவ வீரர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இருந்துவருகிறது. ராணுவ வீரர்களுக்கென்றே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகத்தில் ராணுவ கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருள்களை வாங்கி செல்வார்கள்.
தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த கேண்டீனும் மூடப்பட்டது. அண்மையில், ஊரடங்கு தளர்வுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி முதல் கேண்டீன் திறக்கப்பட்டதையடுத்து பொருள்களை வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்தக் கூட்டத்தைக் கட்டுபடுத்த கேண்டீன் நிர்வாகம் ஒரு நாளைக்கு 150 டோக்கன் மட்டும் விநியோகிக்க முடிவு செய்து, அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் டோக்கன் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால், இன்று காலை 8 மணிக்கு வழங்கப்படும் டோக்கனுக்காக முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என ஆயிரக்கணக்கானோர் திருமண மண்டபம் அருகிலேயே நள்ளிரவு 12 மணி முதலே குவியத் தொடங்கினர்.
கால் கடுக்க காத்திருக்கும் ராணுவ வீரர்கள் டோக்கன் பெற வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்து 7 மணி நேரத்திற்கும் மேலாக காத்து கிடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் 15ஆம் தேதி முதல் இதே கேண்டீனில் மதுபானங்கள் விற்பனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 26இல் தொடக்கம்!