கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், கோகுல் நகர்ப் பகுதியில் உள்ள பகுதி 16 வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து நிலம் விற்பனை செய்த சம்பவத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஓசூர் கோகுல் நகர்ப் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 16ல் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற இந்த நிலத்தை, போலியாக சில நபர்கள் ஆவணங்கள் தயாரித்து பத்திரம் செய்ததாக, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்குப் புகார் வந்துள்ளது.
புகாரினைத் தொடர்ந்து, விசாரணைக்குப் பின் பாஸ்கர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பாஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் அறிவுரைப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ராஜா ரவி தங்கம் தலைமையில் ஆய்வாளர் சாவித்திரி உட்பட தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.