கிருஷ்ணகிரி:ஓசூர் தாலுகா, சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் நில உச்ச வரம்புச் சட்டம் அமல்படுத்திய பிறகு 2500 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பட்டா இல்லாத நிலங்களை, பைமாசி நிலம் என அழைக்கும் நிலையில் 2018ஆம் ஆண்டு பைமாசி நிலத்திற்கு பட்டா வழங்கிட தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் நிலவரித் திட்டம் என்கிற துறையை உருவாக்கி 3 தாசில்தார்கள் பட்டா வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் தமிழ்நாடு அரசு உளியாளம் கிராமம் மற்றும் 5 கிராமங்களை உள்ளடக்கி, 1000 ஏக்கர்களை கையகப்படுத்தி தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கிராமங்களில் சுமார் 8000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், பல தலைமுறைகளாக வீடுகள் கட்டி, விவசாயம் செய்து வரும் நபர்களுக்கு பட்டா இல்லை என்பதாலும், ஐ.டி. பார்க் ஒட்டிய நிலம் என்பதாலும் 'அரசு டெக் பார்க்' அமைக்க திட்டமிட்டுள்ளது. பைமாசி நிலத்திற்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அரசின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.