கரோனா ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லாததால் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு சமானிய மக்களின் மீது இடியாக இறங்கியது. தற்போது, கூடுதலாக வாகனங்களுக்கு சாலைவரி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் சாலைகளைப் பயன்படுத்தாத சூழ்நிலையில் சாலைவரி கட்ட கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் கண்டித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு சுமார் 50 ஆயிரம் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.