கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது அவற்றை விற்பனை செய்து வரும் தொழிலை, 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள்தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றன.
விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வேண்டி மனு - விநாயகர் சிலை விற்பனைக்கு அனுமதி
கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்யும் மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தற்போதைய கரோனா ஊரடங்கில் இவர்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் நேற்று (ஆக. 10) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை விநாயகர் சிலையுடன் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ”தற்போது ஊரடங்கு காலம் என்பதால் விநாயகர் சிலை விற்பனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. 115 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் இந்தத் தொழிலை செய்து வருகிறோம். இப்போது எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு விற்பனையாகும்.
ஆனால் ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்தை விட்டே வெளியே செல்வது கேள்விக்குறியாக உள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்சம் ஐந்து அடி சிலைகளையாவது விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும்.
மேலும் விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் போகும் பட்சத்தில் எங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மானியக் கடன் வழங்க வேண்டும். அப்படி வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்த வருடம் இந்தத் தொழிலை எங்களால் செய்ய முடியும். எனவே முடங்கிப்போன எங்களுடைய வாழ்வாதாரத்தைக் காக்க, மாவட்ட நிர்வாகம், மாநில அரசுக்கு தெரிவித்து எங்களைப் பாதுகாக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.