தருமபுரி:விபத்தில்படுகாயம் ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்தவரது உடல் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், உறுதி செய்து கொண்ட மருத்துவக் குழுவினர் அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் முன் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர், உடல் உறுப்புக்களை தானமாக பெற்றனர். தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் முதலில் இருதயம் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், அவரது உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இரண்டு கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.