கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ளது எடவனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சாக்கப்பன் (60) என்பவர் கிராமத்தின் அருகில் தோட்ட வீட்டில் மனைவி, மகன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். தேங்காய் வியாபாரியான இவர், லட்சக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதில், பலருக்கும் இன்று வரை பணம் வழங்காமல், வெளியில் செல்வதைத் தவிர்த்து ஆறுமாதகாலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சாக்கப்பாவின் மகன் வேணுகோபால் என்பவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட 8 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து பணம், நகை இருந்தால் தருமாறுக் கேட்டுள்ளனர்.
அதற்கு இல்லை என்று கூறிய சாக்கப்பாவை, கத்தியால் வெட்டிச் சாய்த்துள்ளனர். பிறகு வீட்டின் பின்புற கதவு வழியாகத் தப்பியோடியுள்ளனர். கண் பார்வையற்ற சாக்கப்பா மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் உயிருக்குப் போராடிய சாக்கப்பாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கத்தியால் குத்தி முதியவர் கொலை இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ராயக்கோட்டை காவல் துறையினர், சாக்கப்பாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கப்பா ஏலச்சீட்டை வழங்காததால் கொல்லப்பட்டரா? அல்லது நகைகளுக்காகக் கொல்லப்பட்டரா? என்கிற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ள காவல் துறையினர், 8 பேர் கொண்ட முகமூடி கும்பலைத் தேடி வருகின்றனர்.