தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதி - வேலூர் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் விசாரணை மேற்கொண்டார்

வேலூர்: குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mysterious death inmate at police station in vellor
காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதி!

By

Published : Feb 1, 2020, 11:39 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மாதையன். இவர் தனது மகன் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் என்று நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உள்ளி என்ற பகுதிக்குச் சென்றால் குறைந்த விலையில் நகை வாங்கலாம் என்று அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்புப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து மாதையன் குடியாத்தம் பகுதிக்குச் சென்று கார்த்திக்கின் சகோதரர் மற்றும் நண்பர் ஒருவரிடம் ஒரு கிலோ தங்க நாணயம் 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அவற்றை உரசிப் பார்த்த போது அவை அனைத்தும் பித்தளை என்பது தெரியவந்ததுள்ளது.

அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் மாதையன் குடியாத்தம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்பவரை விசாரணைக்காக கைது செய்ய சென்றபோது அங்கு அஜித்குமார் இல்லாததால் அவரது தந்தை மகேந்திரனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணை மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்டிருந்த மகேந்திரன், காவலர்கள் இல்லாத நேரம் பார்த்து காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் துண்டு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும், பின்னர் அவர் உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் காவல்துறையினரால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.

காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதி!

இதுகுறித்து தகவலறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, மகேந்திரனை காவலர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு தகவல் அறிந்து வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details