கிருஷ்ணகிரி:தமிழக - கர்நாடகா மாநில எல்லைகளான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் 30க்கும் அதிகமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை படுஜோராக நடைபெறும். தீபாவளி பண்டிகை காலங்களில் மட்டும் பட்டாசுகளை விற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை தினமும் 600 ரூபாய் கூலி, தங்குமிடம், உணவு இலவசம் என அழைத்துவரப்படுவதும், பண்டிகை முடிந்ததும் கூலியுடன் இலவசமாக பட்டாசுகளை வாங்கிச் செல்வது வழக்கமான நடைமுறையாகும்.
அதேபோல தான், கர்நாடக மாநில எல்லையில், ராமசாமி ரெட்டி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரது மகன் நவீண் என்பவர் பட்டாசு கடை அமைத்துள்ளார். அடுத்த மாதம் தீபாவளி என்பதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 5 பேர், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 10 பேர் என 30 பேர் வரை வேலை செய்து வந்துள்ளனர்.
அங்கு, பெரிய கண்டெய்னர் லாரியிலிருந்த பட்டாசுக்களை 200 அடி நீளமுள்ள கடையில் இறக்கி வைத்து அடிக்கியும், மேலும் டாடா ஏஸ் வாகனங்களில் பட்டாசு பெட்டிகளை ஏற்றியும் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று நண்பகல் 3 மணியளவில் திடீரென கடையின் மைய பகுதியில் புகைக் கிளம்பி பட்டாசுக்கள் வெடித்து சிதறத்தொடங்கியது. அப்போது, முன்பக்கத்தில் இருந்தவர்கள் தப்பியோடிவிட கடையின் உள்ளே இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
தீ மளமளவென பரவி கரும்புகையுடன் பட்டாசுக்கள் வெடித்து சிதறியதால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கடை முன்பாக இருந்த 7 இருசக்கர வாகனங்கள், ஒரு கண்டெய்னர் லாரி, 3 டாடா ஏஸ் வாகனங்கள் தீக்கிறையாகின. பின்னர் அத்திப்பள்ளி, பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடையிலிருந்து வெளியே ஓடி வந்தவர்கள், கடையில் இருபது பேர் வரை சிக்கியிருக்கலாம் என கூறி அதிர வைத்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமடைந்தன. 5 மணிநேர மீட்புக்கிடையில் சடலங்கள் தேட தேட கிடைத்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார் என தெரியாத நிலையில், அனைவரும் தமிழர்கள் என்பது மட்டுமே உறுதியானது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.