கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரத்து 800
நபர்கள், அவர்களது சொந்த மாநிலமான பிகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில்மூலமாக நேற்று (மே 24) அனுப்பி வைக்கப்பட்டனர்.
நபர் ஒருவருக்குப் பயணச் சீட்டு தலா ரூ.875 வீதம் ஆயிரத்து 800 நபர்களுக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில் பயணச்சீட்டு தொகையை தமிழ்நாடு அரசு, பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் அளித்துள்ளது.
முன்னதாக பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு மருத்துவ சோதனை செய்தும்; ரயில் பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து கொண்டும் தெளிக்கப்பட்டது.
வெளிமாநிலப் பயணிகளுக்கு ரயில் பயணத்தின்போது அவர்களுக்கு உண்ண உணவு, குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் அவர்கள் பதிவு செய்யும் அரங்கில் கூட்டம், நிரம்பி வழிந்ததால் நீண்ட வரிசை, நெடுநேரம் கால்கடுக்க காத்திருந்த ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க முடியாமல் போனது. அந்த சிறப்பு ரயிலில் ஆயிரத்து 800 பேர் மட்டுமே பயணிக்க இடம் இருந்ததால், அதைத் தாண்டி யாரையும் அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கூறும்போது, "நம் மாவட்டத்தில் தோராயமாக இன்னும் ஒரு ரயிலில் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு பிகார் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான ரயில் நாளை மறுநாள் வரவிருக்கின்றது" என்றார்.