கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆட்சியர், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம ஊராட்சிகள் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் பதிவு செய்யும் வகையில் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களிலேயே ஊர்வலங்கள், பரப்புரைகள் குறித்த அனுமதியினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 தினங்களில் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். மீறுவோர் மீது மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடாத வகையில், தேர்தல் ஆணையத்தால் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புக்காகக் காணொலிப் பதிவு, இணையவழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் புகார்களை 24 மணிநேரமும் தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றி அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!