கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இந்தக் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா மகேஸ்வரி, சரவணபவ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திடீரென பங்கேற்ற கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் டி. செங்குட்டுவன், இதுவரை மேற்கொண்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும், பெலவர்த்தி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கோரி, ஒரு வருடத்திற்கு முன் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். இதேபோல, திமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், ஒன்றியக் குழுவின் நிதி, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்கப்படாமல், வேறு பணிகளுக்காக செலவிடப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால், சட்டப்பேரவை உறுப்பினரின் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறினர்.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எட்டு பேரும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.