கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியைச் சேர்ந்தவர் நீலம்மா. இவர் தனது மகளுக்கு மூன்று மாதங்களுகக்கு முன்னதாக திருமணம் செய்துவைத்துள்ளார்.
கடந்த மாதம் நீலம்மாவின் மகள் பிறந்த வீட்டிற்கு வந்தபோது, நகைகள் பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக நீலம்மா அத்திப்பள்ளியில் வசிக்கும் தனது தங்கையான சந்திரம்மா என்பவரிடம் கொடுத்து பத்திரப்படுத்தியுள்ளார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு தனது மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டுமென தனது தங்கையிடம் வழங்கிய நகைகளைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து சந்திரம்மா தங்கநகைகளை பையில் வைத்து அந்திவாடிக்கு தனியார் பேருந்தில் வந்துள்ளார்.
அவ்வாறு வந்துகொண்டிருந்தபோது அவரது பையிலிருந்து தங்கநகைகளைக் கொள்ளையர்கள் அசந்த நேரத்தில் கொள்ளையடித்துள்ளனர். பையில் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். பின்னர், அந்திவாடியில் இறங்கிய சந்திரம்மா தங்கநகைகள் காணாமல்போனதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.