போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் விடுமுறையில் இருந்த ராணுவ வீரரான பிரபு, அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படும் சின்னசாமி திமுகவைச் சேர்ந்தவர் என்றும், இதனால் இக்கொலையில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது துரதிஷ்டமானது எனவும், இவ்வழக்கில் கொலை செய்தவரும், கொலையானவரும் நெருங்கிய உறவினர்கள் என கூறினார். இவ்வழக்கில் அரசியல் நோக்கம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
கொலை வழக்கில் எந்த அரசியல் கட்சி பிரமுகருக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்த அவர், பிப்ரவரி 8ம் தேதி பொது தண்ணீர் குழாயில் பிரச்சனை எழுந்ததாகவும், இதனைத் தொடர்ந்து சின்னசாமி மற்றும் அவரது உறவினர்கள் ராணுவ வீரர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். 14ம் தேதி பிரபு உயிரிழந்ததாகவும், இன்றைய நிலவரப்படி இவ்வழக்கில் தொடர்புடைய 9 நபர்களும், ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
சில அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இவ்வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்புவதாகவும் மாவட்ட எஸ்.பி. குற்றம் சாட்டினார். ஆனால் இவ்வழக்கில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, பாஜகவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக, அந்த பிரிவின் மாநில தலைவர் ராமன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் சீருடையுடன் போராட்டம் நடத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #JusticeForPrabhu என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.