கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாதையன் மகன்கள், பிரபாகரன் (30) மற்றும் அவரின் தம்பி பிரபு (29) ஆகிய இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்தனர். விடுமுறையில் இருவரும் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (50) என்பவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் 1வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார்.
பிரபாகரனின் மனைவி பிரியா அவர்களது வீட்டின் முன்பு இருந்த பொதுக்குழாயில் துணிகளை துவைத்துள்ளார். இதை கவுன்சிலரும், அவர்களின் உறவினருமான சின்னசாமி பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடத்தில் துணி துவைக்க வேண்டாம் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
இந்த பிரச்னையினால் ஆத்திரத்துடன் இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்களுடன், பிரபாகரனையும், அவரது தம்பி பிரபு, அவர்களது தாய் மற்றும் தந்தையை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நால்வரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி பிப்.15அன்று ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த தாக்குதலில் தொடர்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ராணுவ வீரர் ஒருவரை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்ததாக பிற கட்சியினர் தகவல் வெளியிட்டனர். இந்த தகவல்களை பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வந்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ் குமார், தாக்கியவரும் காயமடைந்தவர்களும் உறவினர்கள். வாக்குவாதம் அடிதடியாக மாறியுள்ளது. இதில் கொலை செய்ய வேண்டும் என எந்த திட்டமிடலும் இல்லை. இதில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை. தவறான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஒருவர், தானும் இதே போன்ற ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அவர் பேசும் காணொலியினை தற்போதும் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர் பேசியுள்ள அந்த காணொலியில், தனது பேர் ரகு என்றும், கிருஷ்ணகிரியின் கொண்டேபல்லி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.