கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் பஞ்சாயத்திற்குப்பட்ட உட்பட்ட வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது தொளுவபெட்டா. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை என அம்மக்கள் புகார்க் கூறுகின்றனர்.
குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவைகள் இல்லை. குடிநீர் வசதிக்காக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் சரிவர விடுவதில்லை. இதனால் கிராமத்தை ஒட்டிய பகுதியில், அந்தக் காலத்தில் வெட்டியுள்ள கிணற்றை நம்பியே இம்மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். தற்போது கோடைக்காலம் வந்துவிட்டதால் அக்கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது.
குடிநீருக்காக அல்லாடும் மலைக் கிராம மக்கள் அதனால் ஊற்று நீரில் நிறையும் தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து குடங்களில் நிரப்பிக்கொண்டு செல்கின்றனர். நாள் முழுவதும் போராடினால்தான், வீட்டிற்கு இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கிறது என கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடமும், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை இதுகுறித்து மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோடையின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், குடிநீர்ப் பற்றாக்குறையால் தங்களின் பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:'பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்க' - மத்திய சுகாதார அமைச்சகம்