கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, அணையின் நீர்வர்த்து வினாடிக்கு 808 கன அடியிலிருந்து 968 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.66 அடி வரை நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து ஐந்து மதகுகள் வழியாக 968 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வரக்கூடிய நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : அரபிக்கடலில் உருவான 'மகா' புயல்! - நாளை தீவிரமாகிறது