ஒசூர் அருகே, கர்நாடகா மாநில எல்லையில், கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பினர் காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டித்து உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் கிருஷ்ணகிரி:காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையின்படி, தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி நீர் மேலான்மை ஆணையத்தின் கூட்டத்தில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதனை அடுத்து தமிழகத்திற்கு கர்நாடகா மாநிலம் காவிரி நீர் திறப்பதற்கு, கர்நாடகவின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஓசூர் அடுத்த கர்நாடகா மாநில எல்லை பகுதியான அத்திப்பள்ளி நுழைவாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா ரக்ஷன வேதிகே (Karnataka Rakshana Vedike) அமைப்பினர், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என எழுதப்பட்ட உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மாநில மக்களின் நலனிற்காக திடமான முடிவை எடுக்க வேண்டும் என்றும், மாண்டியா, குடகு, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்காக வாரம் ஒரு முறை நீர் திறக்கும் சூழல் இருப்பதாகவும், மேலும் சாம்ராஜ் நகரா, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றதாகவும் கூறினர்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் நிலவும் இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு தொடர்ந்து நீர் கேட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய ஆர்.பி.வி.எஸ்.மணியன்!