கிருஷ்ணகிரி: ஐடி ஊழியரின் இல்லத்திலிருந்து 500 கிராம் நகை, இரண்டு கிலோ வெள்ளிப் பொருள்கள், 50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஒசூரை அடுத்த சித்தனப்பள்ளி, சக்தி நகரில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன் (34). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் கடந்த பிப்ரவரி மாதம் தனது சொந்த ஊரான ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் வீடு பல மாதங்களாக பூட்டியே இருப்பதை நோட்டமிட்ட அடையாள தெரியாத நபர்கள், வீட்டின் அருகே உள்ள புதர் வழியாக உள்நுழைந்து, பூட்டை உடைத்து 500 கிராம் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து வீட்டைச் சுற்றிலும் மிளகை பொடியை தூவி சென்றுள்ளனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண், தேஜஸ்வி மற்றும் அட்கோ காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 391 கோடி மோசடி செய்த தனியார் இரும்பு நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு