கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவாரம் பக்கமுள்ள சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா என்கிற நாராயணசாமி (46). விவசாயியான இவர் வழக்கமாக இரவு தனது தோட்டத்தில் காவலுக்கு இருந்து அங்கேயே தூங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை அவர் மாந்தோப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த சூளகிரி காவல் துறையினர் நாராணயப்பாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து சூளகிரி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது நாராயணப்பாவின் மகன் அருண்குமார் (20), அவரது தம்பி பசப்பா மகன் அஜித்குமார் (20), ஆகிய இரண்டு பேரும் அவரை அடித்துக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் காவல் துறையினர் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட நாராயணப்பா நிலத்திற்கு வேப்பனப்பள்ளி அடுத்த கரியசந்திரத்தைச் சேர்ந்த கைம்பெண் ஒருவர் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும், நாராயணப்பாவுக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாராயணப்பா வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று அடைமானம் வைத்து பணத்தை அவர் செலவு செய்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண்குமாரும், தம்பி மகன் அஜித்குமாரும் கட்டை, இரும்பு கம்பியால் நாராயணப்பாவை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலை?