கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடராஜன் (39). கார் டிரைவரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பிரியா (35) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு நான்கு வயதில் கோயல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிலிருந்து வந்து கங்கோஜிகொத்தூரிலுள்ள நடராஜனின் தாயார் வீட்டில் வசித்துவந்தனர்.
சில நாள்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் அதனால் கடந்த வாரம் பிரியா நடராஜனுடன் கோபித்துக்கொண்டு ஓசூர் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்னர் பிரியாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன், பிரியாவை அருகில் இருந்த கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பிரியா இறந்துள்ளார்.