கிருஷ்ணகிரி:ஓசூரில் உள்ள சிறு - குறு, நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பு அலுவலகத்தில் அதன் தலைவர் (HOSTIA) வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொலைநோக்கான அனைவருக்குமான நிதிநிலை பட்ஜெட்டாக உள்ளதை வரவேற்கிறோம். தொழில்துறைக்குச் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்குப் பல எண்ணற்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சுமார் ரூ.1,509 கோடி, அதாவது கடந்த நிதியாண்டை விட சுமார் ரூ.600 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மூலதன மானியம் சுமார் 40% வரை 6% வட்டி மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் தொழில் துறைக்கு ரூ 3,268 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இரண்டு அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் திறன் மேம்பாட்டு மையம் என்கிற அறிவிப்பால் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் திறன்மிகுந்த தொழிலாளர்களைப் பெற முடியும். ஒசூர், கோவை, சென்னை 3 மாநகரங்களில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம் கொண்டு வந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.
நிதியமைச்சர் ஓசூரை 3 வது பெரிய தொழில்நகரமாக முக்கியத்துவம் அளித்துள்ளார். குறிப்பாக தொழிற்சாலைகளில் எதிர்கால பணியாளர் தேவையை கருத்தில் கொண்டு தொழில் நுட்ப கல்வி பயிலும் ஐடிஐ, பாலிடெக்னிக் இன்ஜினியரிங் போன்ற மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதற்கு இண்டஸ்ட்ரி 4.0, திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.