கிருஷ்ணகிரி:உத்தனப்பள்ளி அருகே உள்ள சினிகிரிப்பள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் நவ்யா ஸ்ரீ (17). இவர், கெலமங்கலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்தார்.
இந்நிலையில், நவ்யா ஸ்ரீ வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்றார். பின்னர் மாலையில் அரசுப் பேருந்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது பேருந்து சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவி பேருந்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருடைய கை, கால்கள் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது.
இதையடுத்து, படுகாயம் அடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மாணவி நவ்யா ஸ்ரீ சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், பேருந்து வழக்கம்போல நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்