கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லைப் பகுதியாக விளங்குவதால் ஓசூர் - பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் பகுதியில் தமிழ்நாட்டின் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கியச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் வாடகை வாகனங்களுக்கு தற்காலிக பர்மிட்டுகள் கட்டணம் வசூலித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு நாள்தோறும் வரும் வாகனங்களிடம் ஒவ்வொரு வாகனத்திற்கு 200 ரூபாய்முதல் 300 ரூபாய்வரை அலுவலர்கள் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் அவ்வாறு கொடுக்க மறுப்போரின் வாகனங்கள் கர்நாடகாவிற்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும் லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது ஆர்டிஓ சோதனைச்சாவடியில் அலுவலர்கள் பணத்தைக் கேட்கும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தகவல்களைச் சேகரிக்க சென்றபோது, வாகனங்களிடம் சோதனைச்சாவடியில் பணம் பெற்றுவருவது தெரியவந்தது. செய்தியாளர்களிடம் காணொலி குறித்து பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டனர்.
ஓசூர் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடி பின்னர் வந்த லாரிகளில் ஓட்டுநர்கள் பணம் வழங்க முயன்றபோது பணம் வாங்காமல் ஆவணங்களை மட்டும் சரிபார்த்து அனுப்பியது லாரி ஓட்டுநர்களையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. இவ்வாறு தினந்தோறும் அதிகப்படியான ரூபாயை வசூலித்து, லாரி ஓட்டுநர்களைத் தரக்குறைவாக நடத்தும் அலுவலர்கள் மீது ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!