Valentine's Day: புதுவகை ரோஜாக்களை அறிமுகம் செய்ய ஓசூர் விவசாயிகள் கோரிக்கை கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம், சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால், இங்கு அதிக அளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி (Cultivation of roses) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நெப்லஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் (Valentine's Day) ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக பயிரிடப்படுகின்றன.
இவை மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டுகளில் கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்பத்தி செய்த பூக்கள் விற்பனையாகாமல் நஷ்டத்தை சந்தித்தனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் ஊருக்குச் சென்றதும், நஷ்டம் காரணமாக சரியான முறையில் ரோஜா செடிகளை பராமரிக்க முடியாத நிலையில் கடந்தாண்டு காதலர் தினத்தை குறிவைத்து விவசாயிகள் ரோஜா மலர்களை அதிகளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தனர். இந்நிலையில் அங்கு 30% வரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்தாண்டு ரோஜா செடிகளை சரியான முறையில் பராமரித்து வந்தாலும் கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் எதிர்பார்த்த உற்பத்தியில் 40% குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், தற்போது உள்ளூர் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காதலர் தினத்திற்காக சிவப்பு ரோஜா மலர் ஒன்று 20 ரூபாய்க்கும் மஞ்சள், வெள்ளை நிறம் உள்ளிட்ட ரோஜாக்கள் 16 ரூபாய் வரையும் விற்பனையாவதால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து விவசாயிகளில் ஒருவர் கூறுகையில், 'எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் ஆண்டுதோறும் புதிய வகை ரோஜா மலர்களை அறிமுகப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி அதிக அளவில் செய்து வருகிறது. இதனால்தான், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவை பொறுத்தவரை தாஜ்மஹால் உள்ளிட்ட சில வகை ரோஜாக்களை மட்டுமே உற்பத்தி செய்தபோதும், கரோனா ஊரடங்கிற்குப் பிறகு விமானப் போக்குவரத்து 120% வரை உயர்ந்திருப்பதால், இந்தாண்டு 20 லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளூரிலேயே அதற்கான விலை கிடைத்தாலும் அந்நிய செலாவணியை ஈர்க்க புதிய வகை ரோஜா மலர்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவும், அதற்கான ராயல்டி பிரச்னைகளையும் தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆவினை அழிக்க அரசு முயற்சி என பால் முகவர்கள் சங்கம் புகார்!