கிருஷ்ணகிரி: நண்பனின் மனைவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மது போதையில், நண்பனை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை மறைத்த வழக்கில் 17 ஆண்டுகள் பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகோபசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 46). இவரது மனைவி யசோதா. கூலி தொழில் செய்து வரும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத்தின் நண்பர் பாபு என்கிற வெங்கடேஷ் (வயது52). இவரும் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மஞ்சுநாத் மற்றும் பாபு இருவரும் கலுகோபசந்திரம் கிராமத்தில் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளனர். மஞ்சுநாத்தின் மனைவி யசோதா விவசாய நிலத்திற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். யசோதாவை பார்த்த பாபு அவரை அடைய வேண்டும் என நினைத்து அதற்கு இடையூறாக இருந்த மஞ்சுநாத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தனியார் கிளப் குத்தகை விவகாரம்... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதனைத்தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, பாபு தனது நண்பர் மஞ்சுநாத்தை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி என்ற கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மேலும், அங்கு இருவரும் மது அருந்திய நிலையில், மது போதையில் இருந்த மஞ்சுநாத்தின் தலையில் பாபு வெங்கடேஷ் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் அவரது உடலை அங்குள்ள பாறை கற்களுக்கு இடையே மறைத்து வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மஞ்சுநாத்தின் உடலை தேன்கனிக்கோட்டை போலீசார் மீட்டு விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், மஞ்சுநாத்தை இருசக்கர வாகனத்தில் பாபு அழைத்துச் சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
கொலை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மஞ்சுநாத்தின் மனைவி யசோதாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மஞ்சுநாத்தை மது போதையில் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மஞ்சுநாத்தின் கொலை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, மஞ்சுநாத்தை கொலை செய்த குற்றத்திற்காக பாபுவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனமாடியதில் தகராறு... ஒருவர் கொலை; கடலூரில் நடந்தது என்ன?