கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர், தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் சுபாஷ் (28), திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுபாஷின் தந்தை, தனது மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அனுசுயாவின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த மார்ச் 27ஆம் தேதி சுபாஷ் - அனுசுயா திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளனர். சுபாஷ், திருப்பத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே சுபாஷின் பாட்டியும், தண்டபானியின் தாயுமான கண்ணம்மாள், சுபாஷின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு, வாடகைக்கு வீடும் பார்த்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது தாய் கண்ணம்மாளிடம், ‘உனது பேரனை வீட்டிற்கு விருந்திற்கு வரவழைத்து சமாதானம் பேசிக் கொள்ளலாம்’ என தண்டபானி கூறியுள்ளார். இதனால், தனது பேரன் சுபாஷ் மற்றும் அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தமிழ் புத்தாண்டுக்கு, அருணபதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு பாட்டி கண்ணம்மாள் அழைத்து உள்ளார். இதனையடுத்து இருவரும், நேற்று (ஏப்ரல் 14) ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, இரவு உணவு முடித்து விட்டு, அங்கேயே இருவரும் தங்கி உள்ளனர். அப்போது அங்கு வந்திருந்த தண்டபாணி, இருவரிடமும் சகஜகமாக பேசி உள்ளார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) அதிகாலை 5 மணியளவில், தண்டபாணி கூர்மையான கத்தியால், தனது மகனை வெட்டி உள்ளார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி கண்ணம்மாள் மற்றும் மனைவி அனுசுயா ஆகியோர் தண்டபானியை தடுத்துள்ளனர்.