கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் விளையாட்டு, கவின், நுண்கலை என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதனைத் தொடக்கிவைத்த பின் உரையாற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில புதிய பாடத் திட்டங்களை வழங்கி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரும் தொண்டாற்றினார். இதனால் இந்தப் பகுதிகளில் உயர் கல்வித் துறை பயிலும் மாணவர்கள் சதவீதம் அதிகரித்தது.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 45 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 961 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. எம்.பில். படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். உயர் கல்வி தேர்ச்சி பெறுவதில் கூட தமிழ்நாட்டு மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆக அனைத்து விதத்திலும் உயர் கல்வி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. புதிய கல்லூரிகள் தொடங்கும் அதே வேளையில் கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. உள்கட்டமைப்பு வசதி, பாடப் பிரிவுகள், தேர்ச்சி சதவீதம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது" என்று கூறினார்.