கிருஷ்ணகிரி சோதனைச் சாவடி அருகே தாலுகா காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காய்கறிகள் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அதில், லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
காவல்துறையினரைக் கண்ட லாரி ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இதனையடுத்து பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி சென்ற லாரி மற்றும் அதில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய ஓட்டுநர் சரவணன் மற்றும் லாரி உரிமையாளர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.