தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.
அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் தீ விபத்து! - lok sabha election 2019
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் அண்ணா சிலை ரவுண்டானா புல்தரைகள் பற்றி எரிந்தது. தீப்பற்றி எரிவதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் இன்று பரப்புரை மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி திருவனப்பட்டி, நொச்சிப்பட்டி, மேட்டுதாங்கல், கல்லாவி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா வந்தபோது அவரை வரவேற்க பட்டாசு வைக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில், அண்ணா சிலையில் உள்ள ரவுண்டானா தீப்பொறி பற்றி எரிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த ரவுண்டானாவில் உள்ள புற்கள் பற்றி எரிந்து நாசமானது.
இந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கபடுமா என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவினர் தீப்பற்றி எரிவதையும் கண்டுகொள்ளாமல் வாக்கு சேகரிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வந்தனர். தெருவோரத்தில் கடை நடத்தி வருபவர்கள் அவர்கள் கடை எங்கும் தீப்பற்றி எரிந்து விடுமோ என அச்சத்தில் தண்ணீரைக் கொண்டு அணைத்து வந்தனர். பிறகு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.