பள்ளி கட்டடம் இல்லாமல் மொட்டை மாடியில் பாடம் கற்கும் அவலம்! கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அரசுப்பள்ளி கட்டட சுவர்களில் விரிசல் அடைந்து இடிந்த நிலையில், பயன்படுத்த முடியாத சூழலில் இருந்ததால் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவெடுக்கப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி தொடரும் வகையில் அருகில் உள்ள 2 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 9 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 3 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு படித்து வரும் மொட்டை மாடி வகுப்பறைக்கு சென்று அங்கு மதிய உணவை சாப்பிட்டு வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு பதில் அங்கு தற்போது வரை புதிய பள்ளி கட்டடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை, இதனால் அரசு பள்ளியில் தொடக்க கல்வியை பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.
எனவே, உடனடியாக பாலிகானப்பள்ளி கிராமத்தில் புதிய அரசு பள்ளி கட்டடத்தைக் கட்டி கொடுத்து மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு