கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி சாலையில் உள்ள சுபாஷ் நகரில் வசித்து வருபவர் தில்லை கோவிந்தராஜ் (50). இவர் சுவாமி சிலைகளைச் செதுக்கும் சிற்பியாகவும், ஒப்பந்தம் அடிப்படையில் கோயில் கட்டுமான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தில்லை கோவிந்தராஜ் தனது குடும்பத்தினரோடு மைசூரூ, ஊட்டி மற்றும் கோவை ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார்.
அப்போது தனது வீட்டைப் பூட்டிவிட்டு, தனது வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்து, வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தில்லை கோவிந்தராஜ் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் ஜன்னலை உடைத்து, கதவை இரும்பு கம்பியால் உடைத்துத் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணம், 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து தில்லை கோவிந்தராஜுக்குத் தகவல் அளித்துள்ளனர்.