கிருஷ்ணகிரி:ஓசூரில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை, உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக மாற்றி குற்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இணையதள இணைப்பு வாயிலாக சட்டத்திற்கு புறம்பாக மாற்றி சுமார் 70 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் இரண்டு இளைஞர்கள் ஓசூர் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ரூட்டர்களை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் ஐடியல் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியை சேர்ந்த அருள் (34) என்பவர் அவுட்சோர்சிங் மையத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த மையத்தில் 40 கம்ப்யூட்டர்கள் வைத்திருப்பதாகவும், ஆயிரம் போன் இணைப்புகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளுவதற்காகவும், அதிவேக இணையதள இணைப்பை, ஜியோ பைபர் நிறுவனம் மூலம் பெற்றுள்ளார். இதன் வாயிலாக அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த ராஜீவ் என்பவரது தொடர்பு ஏற்பட்டுள்ளது.
70 லட்சம் மோசடி: இந்நிலையில், இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றுவதால் பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி உள்ளார். இதற்கு மயங்கிய அருள், இதற்கான முயற்சிகளை ஐபி அட்ரஸ் வாயிலாக மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் நாடு உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, இன்டர்நெட் வாயிலாக அதிக நேரம் பேசக்கூடிய அளவிற்கு உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி, சுமார் 70 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.