கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இங்கு 339 கோடி ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுபள்ளி எனும் இடத்தில் இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 14 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி இந்த அரசு சாதனை புரிந்துள்ளது. இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக கூடுதலாக இரண்டாயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளை விட கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனைக்கு மக்கள் வரும் காலம் விரைவில் ஏற்படும். 20 கோடி ரூபாய் மதிப்பில் கேன்சர் குணப்படுத்த இலவச சிகிச்சை வசதியும் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, இந்த அரசு சாதனை நிகழ்த்தி உள்ளது.
விவசாயிகள், பெண்கள், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்திவருகிறது. கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மாநில எல்லை வரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் வரையில் நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துவருகிறது.