கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எ.சாமானப்பள்ளியில் நகராஜு என்பவர் தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி (கேந்திப்பூ) பயிரிட்டுருந்தார். தற்போது கோடை காலம் என்பதால் பூக்களை அறுவடை செய்து எப்படியாவது தனது கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார்.
ஆனால், எமன் வடிவில் வந்த கரோனா உலகத்தையே முடக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் முடக்கியுள்ளது. அதேபோன்று, செண்டுமல்லி பூ பயிரிட்டிருந்த நகராஜூவையும் முடக்கியுள்ளது.
இதுகுறித்து மனம் திறந்த அவர், "கரோனா பெருந்தொற்றுப் பரவலால் தற்போது அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு என்னை மேலும் கடனாளியாக்கிவிட்டது. நான் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து இந்த செண்டுமல்லி பயிரிட்டுள்ளேன். தற்பொழுது மழையுமில்லை, கிணற்றில் தண்ணீருமில்லை. பூக்கள் வெயிலில் கருகிவிட்டதால். அறுவடையுமில்லாமல் தவித்து நிற்கிறேன்.
மண்ணில் கருகிய ஒருலட்சம் மதிப்புள்ள செண்டுமல்லி ஒரு கட்டத்தில் இதனை பார்த்துக்கொண்டிருந்தால் எனக்கு மேலும் மனஉளைச்சல் அதிகமாகி தற்கொலை செய்யும் எண்ணம் வந்ததால் என் குடும்பத்திடமும், கடன்காரர்களிடமும் பேசி டிராக்டர் கொண்டு என் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செண்டு மல்லி பயிரினை உழுது அழித்துள்ளேன். அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.