கிருஷ்ணகிரி:ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. தீபாவளியையொட்டி, வியாபார நோக்கத்துடன், மேலும் 2 கடைகளை அருகிலே பட்டாசு கடை நிர்வாகம் திறந்து உள்ளது.
இந்தக் கடையில் அரூர், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி ஆகிய பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட தமிழக இளைஞர்கள் வேலை செய்து வந்து உள்ளனர். இந்நிலையில், கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையில், கூடுதலாக 2 டாடா ஏஸ் வாகனத்தில் பட்டாசுகள் வந்து இறங்கி உள்ளன.
பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது திடீரென தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென எரிய தொடங்கிய நிலையில், கடை முழுவதும் பரவியது. இதில் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அனைத்து பட்டாசுகளும் தீக்கு இரையானது. இதுகுறித்து அத்திப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயன்றனர். தீ பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எதிர்பாராமல் தீப்பிடித்ததா அல்லது கடையின் மீது தாழ்வாக இருந்த மின்கம்பி உரசி தீப்பற்றியதா என்று தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.