கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேவுள்ள யடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி யல்லப்பா (54). இவரது மகன் மஞ்சுநாத் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மஞ்சுநாதன் வீட்டு அருகே அவரது சித்தப்பா வீடு உள்ளது. அவ்வப்போது வழித்தடத்திற்காக தனது சித்தப்பாவிடம் மஞ்சுநாத் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே 10) நள்ளிரவில் மதுபோதையில் இருந்த மஞ்சுநாத் தனது சித்தப்பாவிடம் மீண்டும் வழித்தடத்திற்காக சண்டை போட ஆரம்பித்துள்ளார். அப்போது சண்டை முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் மஞ்சுநாத் தனது சித்தப்பாவின் காதை கடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மஞ்சுநாத்தின் தந்தை யல்லப்பா மகனை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்காமல் மீண்டும் அவரை கடிக்கச் சென்று மேலும் ஒரு காதை பலமாக கடித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த யல்லப்பா தனது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகனை வெட்டியுள்ளார். இதில், மஞ்சுநாத் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திகிரி காவல் துறையினர், மஞ்சுநாதன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மகனை கொலை செய்த தந்தை யல்லப்பாவை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.