தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிதியமைச்சரின் ரூ.1 லட்சம் கோடி அறிவிப்பு பட்ஜெட்டின் மாறுபட்ட வடிவம்' - மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் நிவாரண திட்டம்

கிருஷ்ணகிரி: 'விவசாயிகளுக்கு தற்போது அளித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இருந்தபோதிலும் இது பட்ஜெட்டின் மாறுபட்ட வடிவமாகத் தெரிகிறது' என விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராம கவுண்டர்
விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராம கவுண்டர்

By

Published : May 16, 2020, 1:57 PM IST

மத்திய அரசின் சுயசார்பு திட்ட அறிவிப்பு குறித்து விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,

“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகளுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். அந்த நிவாரணம் என்பது பட்ஜெட் உரையின் மறுவடிவம். அதாவது பட்ஜெட்டின்போது விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டத்தை பெயரை மாற்றி மட்டும் சூசகமாகப் புதிய திட்டம் அறிவிப்பதுபோல் அறிவித்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்கூட தற்போது கத்திரிக்காயை ஒரு ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுத்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளன.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட 10 நிலையங்களும் மிகக் குறைந்த அளவு வேளாண், தோட்டக்கலைப் பொருள்களைப் பதப்படுத்திவைப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 10 டன் அளவு மட்டுமே பதப்படுத்திவைக்க முடியும். 10 டன் என்பது மிகவும் சொற்பமான அளவாகும். இதனை, ஆயிரம் டன்னாக உயர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த மையங்களுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே தவிர இதுவரை பதப்படுத்தும் இயந்திரங்கள் இன்னும் நிறுவப்படவில்லை. எனவே பதப்படுத்தி நிலையங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு கூறும்போது அதற்குத் தகுந்த இயந்திரங்களை நிறுவி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எப்போதுமே விவசாயிகள் அடிமட்ட நிலையில்தான் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண நேரங்களில் இவ்வாறான நிலைமை தொடர்ந்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பேரிடியாக விவசாய, தோட்டக்கலைப் பொருள்களை விலையில்லாமல் சாலைகளில் வீசிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு உரியவிலை அளிக்கும்பொருட்டு தொழில் துறைக்கு நிவாரணம் அளித்து ஊக்குவிப்பதுபோல் விவசாய நிவாரணத்தை சரியான முறையில் பயன்படுத்தி விலைவாசியை (கொள்முதல் மதிப்பை) 300 மடங்கு உயர்த்தினால் மட்டுமே இந்திய விவசாயிகளை பாதுகாக்க முடியும்.

விவசாயிகளுக்கு தற்போது அளித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இருந்தபோதிலும் இது பட்ஜெட்டின் மாறுபட்ட வடிவமாகத் தெரிகிறது.

விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம கவுண்டர்

எனவே சரியான முறையில் இந்த நிவாரண திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் பொருள்களுக்கு சரியான விலை கொடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: குழந்தை வளர்ச்சியைக் கணக்கிடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: அமைச்சர் தொடங்கிவைப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details