கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூரில் 2 மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் அமைந்திருப்பதால் 3,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 2,400 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு 3ஆவது சிப்காட் அமைய உள்ளது.
ஆனால், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. குருபரப்பள்ளி பகுதியில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் 4ஆவது சிப்காட் அமைப்பதற்கான பணிகள் ஏறக்குறைய தொடங்கியுள்ளன. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ஆவது சிப்காட்டாக சூளகிரி ஒன்றியத்தில் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட கிராம விளைநிலத்தில் 3,800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த 3 ஊராட்சிகளில் 30 கிராமங்கள் அடங்கி உள்ளன. 50-க்கும் அதிகமான வீடுகளும் இடிக்க வேண்டிய சூழலில் 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இப்பகுதியில் தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டன் ரோஸ், செண்டு மல்லி உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பசுமை நிறந்த இப்பகுதியில் சிப்காட் அமைத்து விவசாயத்தை தடுக்க வேண்டாமெனவும், வேறு பகுதிகளில் சிப்காட் அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நேற்று முன்தினம் (ஜன.19) விவசாயிகள் 14ஆவது நாளாக உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர் சிலர், உத்தனப்பள்ளி காவல்நிலையம் எதிரே உள்ள 2 செல்போன் டவர்கள் மீது ஏறி கைகளில் கருப்புக்கொடியை பிடித்துக்கொண்டு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.