கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தில் நேற்று (மே 29) மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜசேகர், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் மோகன், பையூர் ஆராய்ச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
ஆய்வுக்குப் பின் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது, “இந்த மாதிரியான வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்தவகை வெட்டுக்கிளிகள் கோடை காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பாக காணப்படும்.
இந்த வகை வெட்டுக்கிளிகள் எருக்கஞ்செடி போன்ற பால் சுரக்கும் செடிகளில் மட்டுமே இருக்கும். இவை விவசாயப் பயிர்களை தாக்காது. மேலும் வடமாநிலங்களில் பயிர்களைத் தாக்கக் கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் இவை கிடையாது. இந்த வகை வெட்டுக்கிளிகளை, சாதாரணமாக தண்ணீரில் வேப்ப எண்ணெயை கலந்து தெளித்தால் இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தி விடலாம்” எனத் தெரிவித்தார்.