தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் படம் எரிக்கப்பட்ட விவகாரம்:"கூட்டணி கட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" - கே.பி.முனுசாமி - முன்னாள் அமைச்சர் முனுசாமி விளக்கம்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தவர்கள் மீது, கூட்டணி கட்சித் தலைவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி பேட்டி
கே.பி.முனுசாமி பேட்டி

By

Published : Mar 16, 2023, 6:44 PM IST

கே.பி.முனுசாமி பேட்டி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி, உறுப்பினர்களுக்கு அட்டைகளை வழங்கினார். மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள், உறுப்பினர் அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, 'எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, என்ன கோரிக்கையை பொதுமக்கள் வைக்கிறார்களோ அது நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பொதுமக்கள் வழங்கிய எந்த மனுவிற்கும் முறையான தீர்வு வரவில்லை.

ஏற்கனவே மக்களை ஏமாற்றுவதற்காக திமுக தலைவர் அந்த நாடகத்தை நடத்தினார். தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் மனுக்களை வாங்கி வருகிறார்கள். அதற்கு என்ன தீர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைப்பாடுடனும் செயல்படுகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்தார்கள். தற்போது அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், மூடவில்லை. கடந்த காலத்தில் பொங்கல் பண்டிகைக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ரூ.2,500-ஐ பொதுமக்களுக்கு வழங்கியது. ஆனால், அதனை ஸ்டாலின் ரூ.5,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறினார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 கொடுப்போம் என்றார். ஆனால் தற்போது ரூ.1,000 மட்டுமே வழங்கியுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு கருத்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு கருத்து என மக்களை ஏமாற்றக்கூடிய தலைவராக முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்' எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், 'ஏற்கனவே நாங்கள் எங்களுடைய வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துவிட்டோம். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்’ என முனுசாமி குறிப்பிட்டார்.

பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சிகளாக இருந்தாலும், இவ்விவகாரம் இரு கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரவில் நீக்கம்; காலையில் இணைப்பு.. பாஜகவில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details